Thursday, September 14, 2017

சனிப் பெயர்ச்சி

சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி

என்றும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? அது எப்படி??

சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. இந்த சனியன் எப்பதான் சாவுமோ தெரியல’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’ அட சனியனே என இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது நம்மை அறியாமலேயே புழக்கத்தில் நாம் எல்லோரும் பேசிவருகின்றோம்.

சுமார் 122 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும். அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ.

தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்.

எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத்தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.
சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை.
சனி பகவானுக்குரிய சனிக்கிழமையில் ஒருவன் செத்தால், அந்த வீட்டில் தவறாமல் வேறொரு வரும் சாவான்(ள்)! நிச்சயம் இது நிகழ்ந்ததே, தீருமாம்! சனிப்பிணம் தனிப் போகாது! என்ற பழமொழி வேறு வழங்குகிறதாம்!

எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.

சனிக்கோள் பற்றி நாம் விளங்கிக் கொள்வது- தெளிவு பெறுவது- இன்றியமையாதது?

• சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி.
• சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
• சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். 47 துணைக் கோள்கள் இருக்கின்றன. அதாவது 47 நிலவுகள், சனிக்கோள்
• சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.
• சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது.
• ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில்[Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை. அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை.
• சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை.
• சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும்.
• 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார்.
• வெறும் கண்ணால் பார்த்தால் தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வானில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும். இவற்றில் சனி கிரகம் தான் மிக மெதுவாக நகருகிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும்.

சனிக் கோள் (Saturn)
விட்டம் – 120,660 கிமீ (74,978 மைல்)
மேற்பரப்பு – வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)
ஈர்ப்பு விசை – 1.16 (புவி 1)
திணிவு – 95.2 (புவி 1)
வளிமண்டலம் – நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு
வெப்பம் – 288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)
அச்சின் சாய்வு – 26.73 பாகை
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)
தன்னைத்தானே சுற்றும் வேகம் – நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)
ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம் – 9 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)
ஞாயிறைச் சுற்றும் வேகம் – நொடிக்கு 9.64 கிமீ
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)
உங்கள் எடை (200) – சனியில் 212.8 கிலோ
நிலாக்கள் – 31

சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid] உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தியாக (Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக (Magnetic field) இருப்பதற்கு இதுவே காரணம்.
சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் (Heavey elements) பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய 15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் (Contraction) வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

பூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் (Earth’s Orbit) சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் (Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் (White Spot) கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் (Space Probes)மூலமாகத்தான் அறிய முடியும்.

1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்–1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது அறிவியல் தெளிவு பெறுவோம்.

No comments:

Post a Comment