Wednesday, June 7, 2017

நல்லதங்காள் வரலாறு

நல்லதங்காள் வரலாறு

நல்லதம்பி, நல்லதங்காள்

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பஞ்சம்

திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானா மதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது.
தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவுஇன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

மூளியலங்காரி
அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தையையும் ஆதரிக்காமல் ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சொன்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான், அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான், எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்தாள்.
  
தற்கொலை

மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள்.
"எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.
அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.
குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.
பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
   இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான்.
சிவபெருமான் அருள்
       அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். பத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள். எனவே இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி அவர்களை உயிர்ப்பித்து மீண்டும் இப்புவியில் வாழ் என்றார்கள். ஆனால் மாண்டவரெல்லாம் மீண்டும் வந்தால் இப்புவியில் இடம் இருக்காது. அந்த தவறுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன். எங்களை உன் திருவடியில் சேர்ப்பாயாக என்று வேண்டினாள். அதற்குரிய காலம் விரைவில் வரும். அதுவரை இங்கே அம்பாளாக இருந்து இப்புவிமக்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று கூறி மறைந்தனர். அன்று முதல் இங்கே நல்ல தங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள். நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி வணங்குகின்றனர் மக்கள். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம். நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் நல்லதங்காள், நல்லதம்பி தெய்வமாகவும் அவர்கள் வாழ்ந்த அரண்மனை கோயிலாகவும் போற்றப்படுகிறது. தன்னால் அண்ணனுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என தங்கையும், தங்கைக்கு கிடைக்காத வாழ்க்கை, தனக்கு தேவையில்லை என அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஈடில்லாத ஓர் உணர்வுப்பூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது நல்லதங்காள் கதை.

நல்லதங்காள் கோயில்

      நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.
கோயில் அமைப்பு
    நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.
விழாக்கள்
      இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

பிரார்த்தனை

பிள்ளைப்பேறு, பிள்ளைகள் நலமுடம் வாழ தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் சன்னிதானத்திலும் கட்டி வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.
சிறப்பு
இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.
பயண வசதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்த கிராமம்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும்.
சிறப்பம்சம்:

நல்லதங்காளுக்கு அமைந்த ஒரே கோயில்.    
வறுமையின் சின்னமாக நல்லதங்காள் 
இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
/////////////////////////

Saturday, June 3, 2017

ஊட்டி

1819 ம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராகப் பணியில் இருந்தார் 
ஆங்கிலேயரான ஜான் சல்லிவன்.

 விடுமுறை நாள்களை எப்படி கழிக்கலாம் என யோசித்தவருக்கு மலை உச்சியிலுள்ள அந்த இடத்தைப் பற்றிய தகவல் வருகிறது அந்த இடத்தின் சிறப்புகளைக் கேள்விப்பட்டவுடன் அங்கே எப்படியாவது சென்று விடுவது என முடிவெடுக்கிறார். 

பழங்குடியின மக்களின் உதவியோடு கோத்தகிரி வழியாக கரடு முரடான மலைப்பாதைகளின் வழியாக அந்த இடத்தைச் சென்றடைகிறார். அங்கே சென்றவுடன் அவருடைய பயணக் களைப்பு மறைந்து போகிறது. கேள்விப்பட்டது போலவே மனதையும் உடலையும் புத்துணர்ச்சி ஆட்கொள்ள அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகிறது. 

பின்பு அவர் அங்கேயே தங்குவதற்கு வீட்டை கட்டியதும், 
நீலகிரியின் தந்தை என அழைக்கப்பட்டதும் தனி வரலாறு. 
அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த இடம் ஒத்தகமந்து என அழைக்கப்பட்ட உதகமண்டலம். சுருக்கமாக ஊட்டி.

Friday, June 2, 2017

தமிழ்நாடு காவல்துறை பற்றி..

தமிழ்நாடு காவல்துறை பற்றி..

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
ஆயுதம் 
அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
கடலோர காவல் துறை (Coastal Security Group)
குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
இரயில்வே காவல்துறை (Railways)
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
பயிற்சிப் பிரிவு (Training)

காவல்துறையில் பெண்கள்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது.

காவல்துறைப் பதவிகள்
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்

பதவி
பதவிச் சின்னம்

காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)
அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் தலைவர் (IGP)
ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து

காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP)
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP)
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

ஆய்வாளர் (Inspector)
மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

உதவி ஆய்வாளர் (Sub-Inspector)
இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

தலைமைக் காவலர் (Head Constable)
சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

முதல்நிலைக் காவலர் (PC-I)
சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)
பட்டை எதுவுமில்லை.