Wednesday, March 29, 2017

தேசியப் பறவை---தேர்வு செய்த வரலாறு

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.

அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம்
"நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும்
 ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். 
அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

ஏ.டி.எம். (Automatic Teller Machine)

ஏ.டி.எம். (Automatic Teller Machine)

உருவான கதை கூட சுவாரஷ்யமானது.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினா லும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.டி .எம். உருவாக வித்திட்டது.

1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி .எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.டி .எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார்.

ஏ.டி .எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!

April Fool Day - (முட்டாள்கள் தினம்)

April Fool Day -
(முட்டாள்கள் தினம்)

ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் துவக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர்.

1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.
ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர்.

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படும் உண்டு.

ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாகவும் வரலாற்றாசிரியர்கள கூறுகின்றனர்.

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.
அதோடு பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகள் போன்றவையும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி பொய் செய்திகளை வெளியிடுவதுண்டு.

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.

'மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்' என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது.

பின்னர் அதை ஜோக் என்றது நாசா.

அதேபோல் 2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத்தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது.

ஆனால், வரலாற்றில் ஏப்ரல் 1 என்ற தினத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை அறிவித்தபோது அதை பெரும்பாலானவர்கள் நம்பவில்லை.
முட்டாள்கள் தினத்தை ஒட்டி போலி அறிவிப்பை செய்வதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மையில் அதே தினத்தில் இருந்துதான் அந்த சேவை தொடங்கப்பட்டது.

அதோடு இந்திய ரிசர்வ் வங்கியே இந்த நாளில் தான் 1935ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஆக, முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு. ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.