Monday, September 11, 2017

முட்டாள்களின் கீழ் உலகம் !

முட்டாள்களின் கீழ் உலகம் !
               *******
சிரிப்பூட்டுவதற்கென்றே ஒரு வாயு இருக்கிறது; அது நைட்ரஸ் ஆக்ஸைடு. ஆனால் கோபமூட்டுவதற்கு ஒரு வாயு இல்லை. வாயு இல்லையென்றாலும், அதற்குப் பதிலாகத்தான் வாய் இருக்கிறதே. வாய் உதிர்க்கும் சொற்களில் மிகவும் கோபமூட்டும் சொல் எதுவென்றால் “முட்டாள்” என்பதுதான்.

கடந்த நூற்றாண்டில் மூளையை அதிகமாகப் பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தானாம். அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள் எனச் சொல்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பெரிய பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வர பெரிய பாதையும், அதன் குட்டிகள் வெளியே வரச் சிறிய பாதையும் வைத்திருந்தார். பெரிய பூனையும் சிறிய பூனையும் வெளியே வர ஒரு பொது வழியே போதும் என்கிற பொது அறிவுகூட இல்லாத முட்டாள் என அவரைக் கிண்டல் செய்தார்கள்.

முட்டாள் என சித்தரிக்கப் பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் என சொன்னதற்காகத் தாயைத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. ஆனால், மூன்று முறையும் அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன்தான், பிற்காலத்தில் நவாப்களை வென்று ஆங்கிலேயேக் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றக் காரணமாக இருந்தான். அவன்தான் இராபர்ட் க்ளைவ்.

ஜெர்மினிய சர்வதிகாரி ஹிட்லரை இரண்டு நிகழ்வுகள் அதிகமாகக் கோபமூட்டின. அதில் ஒன்று, ஹிட்லரின் ஆட்சி முட்டாள் ஆட்சி என்று சொன்ன யூதர்கள் மீதான கோபம்தான் கடைசி வரைக்கும் அவனைக் கோபமூட்டிக் கொண்டிருந்தது. அதற்காக யூதர்களை அவன் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தான்.

முட்டாள் என்கிற சொல் விளையாட்டுத் துறையிலும் அதிகம் விளையாடிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் இங்கிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதை எழுத்துலக வேந்தன் பெர்னாட்ஷா “பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பது கிரிக்கெட்”. என்று விமர்சித்தார். உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டான இந்தக் கிரிக்கெட், இதுநாள் வரைக்கும் ஒலிம்பிக் போட்டிற்குள் நுழைய முடியவில்லை என்றால் அதற்கான காரணம் ஷாவின் விமர்சனம்தான்.

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு முறை பிஸ்மார்க் “இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள்” என்றார். அதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. உடனே அவரது கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, “இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள் அல்ல” என்றார்..

இந்த உலகில் தன்னை முட்டாள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் நடிகர் சந்திரபாபு.”நானொரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க” எனப் பாடினார். மற்றொருவர் பிரெஞ்ச் நாட்டு புரட்சியாளர் வால்டர். “உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு இருந்துவிட்டேன். நான் ஒரு முட்டாள்” என்றார்.

உலகத் தலைவர்கள் முட்டாள் என்கிற சொல்லைப் பலவிதமாகக் கையாண்டிருக்கிறார்கள். “நான் முட்டாள்களுக்குத் தலைவனாக இருப்பதை விடவும், புத்திசாலிகளுக்கு வேலைக்காரனாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.. தந்தை ஈ.வெ.ரா பெரியாரோ திராவிட கழகத்திற்குத் தேவை முட்டாள்களே, தவிர புத்திசாலிகள் அல்ல என்றார்.

உலகில் முதன்முதலாக முட்டாள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் சாக்ரடீஸ். 
அவர் நஞ்சு பருகி மரணத்தை தழுவும் முன் இவ்வாறு சொன்னார் 
“நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள் கீழ்தான் இயங்கும்”.

No comments:

Post a Comment