Saturday, August 26, 2017

செட்டில்மெண்ட் பத்திரமும்... தானப் பத்திரமும்

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்
**********************************************************************
செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்.
ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும் பத்திரம் இதுவாகும்.

ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.

குடும்ப உறவினர்கள் என்றால் யார், யார்?
**************************************************************
இந்திய ஸ்டாம்பு சட்டத்தின்படி  தாத்தா, பாட்டி, (தந்தை வழி தாத்தா, பாட்டி, மற்றும் தாய்வழித் தாத்தா, பாட்டி), தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” ஆவார்கள்.

பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி, “அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது.

இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்” (Gift) கொடுக்க முடியும்.

Gift Deed

மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (GiftDeed) மூலமே கொடுக்க வேண்டும்.

இரண்டிற்கும் என்னவித்தியாசம்?
*************************************************
செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்.

மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள் கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம். அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால் தானப் பத்திரம் அவ்வளவுதான்.

ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு; குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே.

அதாவது ரூ.25 லட்சம் வரை மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே.

ஆனால் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 7% ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment