Saturday, August 19, 2017

உயில் என்றால் என்ன?

1.உயில் என்றால் என்ன?

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்?

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3.உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா?

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4.உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5.கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா?

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6.உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7.உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8.உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா?

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9.உயிலை ரத்து செய்ய முடியுமா?

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10.உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்?

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11,உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை.

12.கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13.கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16.எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா?

    முடியும்.

17,உயிலை முத்திரைதாளில்தான் எழுத
   வேண்டுமா?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது. பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம் ?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம்.

19.உயிலை probate செய்ய வேண்டுமா ?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்து
    கொண்டால் செல்லுமா?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன
    நடைமுறை ?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1 % கட்டணம்.அதிகபட்சம் 5௦௦ ரூ.

22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா ?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

Courtesy: இணையப்பதிவுகள்

No comments:

Post a Comment