ஜூலை 22: இந்தியாவின் தேசியக்கொடி
ஏற்கப்பட்ட தினம் இன்று (1947). சிறப்பு பகிர்வு
இந்தியாவின் தேசியக்கொடிக்கு பின்னர் ஒரு சுவையான வரலாறு உண்டு. வெள்ளையரின் யூனியன் ஜாக் கொடி,நட்சத்திரம் அதன் மீது ஒரு கிரீடம் இவை தான் இந்தியாவில் கொடியாக ராணுவத்தில் இருந்தது. ஸ்டுட்கார்ட் எனும் இடத்தில் நடந்த இரண்டாவது சோசியலிஸ்ட் மாநாட்டில் மேடம் பிகாஜி ருத்ஸ்ம்ஜி காமா எட்டு தாமரைகளை மேலே கொண்டு,நடுவில் வந்தே மாதரம் கோஷத்தை கொண்டு,கீழே பிறை மற்றும் சூரியன் இருக்குமாறு இந்தியாவின் கொடியை வடிவமைத்தார். அது பிரபலம் ஆகவில்லை.
கோவையில் ஒரு கொடியை பயன்படுத்தகூடாது என்று தடை எழுந்தது. அது திலகர்,அன்னி பெசன்ட் அம்மையார் இருவரும் சேர்ந்து உருவாக்கிய யூனியன் ஜாக் முத்திரை,பிறை,ஏழு நட்சத்திரங்கள்,சிவப்பு,பச்சை பட்டைகள் என்றிருந்த கொடி. பிங்காலி வெங்கையா முப்பது வெவ்வேறு மாதிரிகளை தேசிய கொடியாக கொள்ளலாம் என்று திட்டங்களை தந்தார். இதற்கான பொருளுதவியை செய்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். காந்தி வெங்கையாவை ஒரு கொடியை விடுதலைக்கு இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன் வடிவமைக்க சொன்னார்.
அவர் ஒரு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு சிவப்பு,பச்சை,கை ராட்டை ஆகியன கொண்டு ஒரு கொடியை வடிவமைத்தார் சிவப்பு ஹிந்துக்களையும்,பச்சை இஸ்லாமியர்களையும் குறிப்பதாக காந்தி சொன்னார். பின்னர் வெள்ளை நிறத்தை பிற மதங்களை குறிக்க சேர்த்துக்கொண்டார். அதற்கு பின்னர் அந்த விளக்கத்தை மாற்றி தியாகம்,தூய்மை,நம்பிக்கை ஆகியவற்றை நிறங்கள் குறிப்பதாக மாற்றி சொன்னார்.
இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததும் தேசிய கொடியை வடிவமைக்கும் பொறுப்பு ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், முன்ஷி, ராஜாஜி, சரோஜினி நாயுடு முதலியோரை கொண்டிருந்த குழு வசம் போனது. காந்தியின் கை ராட்டையை காங்கிரசின் கொடியாக மக்கள் கண்டிருந்தார்கள். அதை அப்படியே ஏற்க அம்பேத்கர் ஆட்சேபம் தெரிவித்தார். அசோக சிம்மத்தூணில் இருந்து சக்கரம் சேர்க்கபட்டது. அது தர்மத்தை வலியுறுத்துவதாக சொல்லப்பட்டது. இதே தினத்தில் அந்த கொடி தேசிய கொடியாக ஏற்கப்பட்டது.
No comments:
Post a Comment