Wednesday, August 9, 2017

நமது தேசியச் சின்னம்!

நமது தேசியச் சின்னம்!...
**********************************
குழந்தைகளே! நமது தேசியச் சின்னம் 
என்ன தெரியுமா? 
சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் 
இருந்து எடுக்கப்பட்ட
 அசோகச் சக்கரமாகும். 
அதில் இருப்பவை
 நான்கு சிங்கங்கள்! 
ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் 
நம்மால் 
பார்க்க முடிவதில்லை. அவற்றின் 
கீழே ஒரு சக்கரமும்
 (தர்ம சக்கரம்-WHEEL OF LAW)
 இடையே சீறிப்பாயும்
 குதிரைகளும், காளைகளும்
 பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின்
 கீழே முண்டக உபநிடதத்திலிருந்து 
எடுக்கப்பட்ட
 "வாய்மையே வெல்லும்' என்னும் 
பொருள் கொண்ட 
"சத்ய மேவ ஜயதே' என்ற வார்த்தைகள் 
தேவநாகரி எழுத்துக்களில் 
பொறிக்கப்பட்டுள்ளன.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி 
இது இந்தியாவின் தேசியச் சின்னமாக 
அங்கீகரிக்கப்பட்டது!
இந்த தேசியச் சின்னத்தை நமது 
இந்திய அரசாங்க அலுவலக
 நோக்கங்களுக்கு மட்டுமே 
பயன்படுத்த முடியும்!

இந்திய குடியரசுத் தலைவர், 
மத்திய அமைச்சர்கள் மற்றும் 
அமைச்சகங்கள், வெளிநாடுகளில் 
உள்ள தூதரகங்கள், மாநில ஆளுநர்கள், 
அரசின் தலைமை அதிகாரிகள்,
 மாநில அமைச்சர்கள் மற்றும் 
தேசிய இலாகாக்களின் ஒரே 
அதிகார பூர்வ முத்திரை இதுவே!

தேசியச் சின்னம், அமைச்சர்கள் பயன்படுத்தும் 
எழுதுதாள்களிலும், சில மிக முக்கிய 
அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டு 
அரசுடனான தொடர்புக்கான 
எழுது தாள்களிலும் நீல வண்ணத்தில் 
அச்சிடப்பட வேண்டும். 
அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் 
எழுது தாள்களில் சிகப்பு வண்ணத்திலும் 
அச்சிடப்பட வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள்
 பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை 
உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் 
தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தேசியக் கொடி!
***********************
கடும் காவி, கடும் பச்சை, 
மத்தியில் தூய வெண்மை 
ஆகிய மூன்று நிறங்களும் 
வரையறுக்கப்பட்ட
 நீள, அகலங்களும் கொண்ட 
மூவர்ணக் கொடியே இந்தியாவின் 
தேசியக் கொடி.
 வெண்பட்டையின் நடுவே ஓர் 
அசோகச் சக்கரமும்
 (கடல் நீல வண்ணம் கொண்டது) 
அதை சுமந்து 24ஆரக் கால்களும் 
உள்ளன.

தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் 
தைரியம் மற்றும் 
தியாகத்தையும், வெண்மை நிறம் 
உண்மை மற்றும் அமைதியையும், 
பச்சை நிறம் நம்பிக்கையையும், 
வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 
"பிங்களி வெங்கைய்யா' என்பவரே 
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற 
விகிதத்தில் அமைய வேண்டும்.

மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை
 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் 
அங்கீகரித்தது.
 
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி 
இந்தியா சுதந்திரக் காற்றைச்
 சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் 
என்று பெயர் சூட்டப்பட்ட
 தில்லி வைஸ்ராய் ஹவுஸில்
 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி
 முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.

எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி 
தில்லி செங்கோட்டையில் 
தேசியக் கொடியேற்றும் 
1948முதல் துவங்கியது.

இந்திய தேசியக் கொடி முதன்முதலாக
 விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது
 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 
என்னும் செயற்கைக் கோள் 
இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.

தேசிய கீதம்!
*******************
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரால் 
எழுதப்பட்டது!
 (தாகூரின் இந்த முழுப் பாடல் மொத்தம் 
ஐந்து செய்யுள் கொண்டது. 
எனினும் முதல் செய்யுள் மட்டுமே 
தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.) 

இந்தியாவின் பூபாளப் பாடல் என்னும் 
இப்பாடலின் சாராம்சம் வருமாறு...

இந்தியத் தாயே! 
மக்களின் இன்ப துன்பங்களைக் 
கணிக்கின்ற நீயே
எல்லோருடைய மனத்திலும் 
ஆட்சி செய்கிறாய்!
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், 
சிந்துவையும், 
குஜராத்தையும், மராட்டியத்தையும், 
திராவிடத்தையும், ஒரிசாவையும், 
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி 
அடையச் செய்கிறது!
நின் திருப்பெயர் விந்திய, 
இமயமலைத் தொடர்களில் 
எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை, 
ஆறுகளின் இன்னொலியில் 
ஒன்று படுகின்றன. இந்தியக் 
கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன
. நின் புகழைப் பரப்புகின்றன
. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் 
கணிக்கின்ற தாயே, 
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

இந்தப் பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் 
பாடி முடிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புக் குழு
 1950 ஜனவரி 24இல் "ஜன கண மன....
பாடலை நாட்டின் தேசிய கீதமாக
 அங்கீகரித்தது. 

தாகூர் வங்காள மொழியில் எழுதிய
 பாடலின் 
இந்தி மொழி பெயர்ப்பே அதிகாரபூர்வமாக 
அங்கீகரிக்கப்பட்டது.

1911, டிசம்பர் 27ஆம் தேதி கல்கத்தாவில்
 நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் 
மகா நாட்டில்தான் இது முதன் முதலாகப் 
பாடப்பட்டது. (மகா நாட்டின் இரண்டாம் தினம்) 
முதல் நாளில் "வந்தே மாதரம்' 
பாடலே பாடப்பட்டது.

1912இல் தாகூரின் தத்துவபோதினி 
பத்திரிகையில் "பாரத விதாதா' என்னும் 
தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
1919இல் "பஏஉ ஙஞதசஐசஎ நஞசஎ ஞஊ ஐசஈஐஅ' 
எனும் தலைப்பில் தாகூரே இதை 
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
வந்தே மாதரம்!
************************
"ஜன கண மன' தேசிய கீதமாக
 அங்கீகரிக்கப்பட்டபோதே 
சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு
 உத்வேகமூட்டிய வந்தே மாதரம்
 பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு 
வழங்கப்படும் உயர்ந்த இடத்தை 
வழங்கவேண்டும் என்று 
தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பாடல்.......

வந்தே மாதரம்!
************************
சஸ்ய சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!.
.....
இப்பாடலை அரவிந்தர் 
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்! 

அதன் தமிழ்ப்பொருள்..
..
""அம்மா வணங்குகின்றேன். 
இனிய நீர்ப்பெருக்கினை,
 இன் கனி வளத்தினை, 
தனி நறுமலயத் தண்காற்
(மலைகளின் குளிர்ச்சி)
சிறப்பினை, பைந்நிறப்
(சியாமள நிறம்)படினம் பரவிய 
, வணங்குகிறேன். வெண்ணிலாக்
 கதிர் விரித்திடும் இரவின்
 மலர் மணிப் பூந்திகழ் மணம்
 பல செறிந்தனை. குறுநகையுடன் 
குலவிய மாண்பினை. நல்குவை 
இன்பம்! வரம் பல நல்குவை! 
அம்மா வணங்குகிறேன்!

1882இல் வெளியான பங்கிம் சந்திரரின் 
ஆனந்த மட் எனும் நாவலில் 
இடம் பெற்ற ஒரு பாடலின்
 முதல் செய்யுள் இது. 

சமஸ்கிருத மொழியில்தான் 
வந்தே மாதரம் எழுதப்பட்டது.
1896இல் நடைபெற்ற இந்திய தேசியக்
 காங்கிரஸ் மகாநாட்டில்தான்
 இது முதன் முதலாகப் பாடப்பட்டது.
 இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

தேசிய மொழி!
**********************
அரசியல் சட்டத்தின் பிரிவு 343(1) இன் படி
 தேவநாகரி லிபியிலான 
இந்தியே நாட்டின் அதிகாரபூர்வமான 
மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் 
அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் 
அரசியலமைப்புச் சட்டம் 
அனுமதித்துள்ளது. 

அரசியல் சட்டத்தின் எட்டாம் 
அட்டவணையில் முதன்முதலாக
 14 மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ
 மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 

தற்போது இதில் மொத்தம் 22 மொழிகள் இடம் 
பெற்றுள்ளன. அவை.....,
1.இந்தி, 2.தமிழ், 3.மலையாளம், 4.வங்காளி,
 5.அசாமி, 6.தெலுங்கு, 7.மராத்தி, 8.ஒரியா, 
9.பஞ்சாபி, 10.சமஸ்கிருதம், 
11.சிந்தி, 12.குஜராத்தி, 13.காஷ்மீரி, 
14.உருது, 15.கன்னடம், 16.கொங்கணி, 
17.மணிப்பூரி, 18.நேப்பாளி, 19.தோஹ்ரி
,20.போட்டோ, 21.சந்தாலி, 22.மைதிலி 
போன்றவை.

தேசியக் காலண்டர்!
*******************************
சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட 
"சக' வருடக் காலண்டரே
 (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) 
மறு சீரமைப்புக் கமிட்டியால் 
அங்கீகரிக்கப்பட்ட 
இந்திய தேசியக் காலண்டர்.

சக வருடக் காலண்டர் கி.பி. 78இல்
 மன்னர் கனிஷ்கரால் 
துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சக ஆண்டு 365 நாட்கள் கொண்டது. 
சாதாரண ஆண்டில் சைத்ர முதல் தேதி 
மார்ச் 22ஆகும். லீப் வருடத்தில்
 சைத்ர முதல் தேதி 21ஆம் தேதியாகும்.
தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879இல்
 சைத்ர முதல் நாளில் (கி.பி.1957 மார்ச் 22) 
தொடங்கியது. 

சக வருட மாதங்கள் சைத்ரம்,
 வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, 
ச்ராவண, பாத்ர, ஆஸ்வின,
 கார்த்திக, அக்ரஹாயன, 
பெüஷ, மாகம், பால்குன.
இதனுடன் நாம் இன்று வெகுவாகப் 
பயன்படுத்தும் ஆங்கிலக் கிரிகோரிய
 காலண்டரும் புழக்கத்தில் உள்ளது. 

கிரிகோரியன் காலண்டர் வருடத்திலிருந்து 
78ஐக் கழித்தால் அப்போதைய சகவருடம் 
கிடைக்கும். (சான்றாக....2016-78=1938--சக வருடம்)

தேசிய விலங்கு!
************************
புலி! ஆம்! இதுவே தேசிய விலங்காகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டது! 
ஆசியப் பகுதியின் சிறப்பு மிக்க 
விலங்கு இது!
புலி இனம் அழிந்து போகாமல் இருக்க
இந்தியாவில் புலி பாதுகாப்புத் திட்டம் 
1973இல் துவங்கப்பட்டது.

தேசியப் பறவை!
************************
மயில்! 1963இல் இந்தியாவின் 
தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
 சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான
 ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் 
உள்ளன. 

தேசிய மரம்!
*******************
""அட! அற்புதம்!'' என்று நினைக்கும்படியான 
மரம்! ஆம் ஆலமரம்! எவ்வளவு சரியான தேர்வு!
 பல்வேறு மாநிலத்தவரும்,
 பல்வேறு மொழியினரும் விழுதுகளாய் 
பாரதத் தாயால் உருவாக்கப்பட்டோம்!
 இன்று அத்தாயை இவ்விழுதுகள் போல் 
வேரூன்றிக் காப்போம்! என்று கட்டியம்
 கூறுவது போல் அல்லவா 
இது அமைந்துள்ளது!

தேசியக் கனி!
*********************
"பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும்
 "மாம்பழம்' தான் நமது தேசியக் கனி!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே
 இந்தியாவில் மாங்கனிச் சாகுபடி நடந்ததாம்!
 (அன்னை, தந்தையே உலகம் என்று
 எல்லோருக்கும் விநாயகர் 
மூலமாக ஞானம் வழங்கிய கனி அல்லவா?)

தேசிய விளையாட்டு!
*********************************
ஹாக்கி! இதுவரை இந்தியா
இந்த விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்கள் 
வென்றுள்ளது! இந்த விளையாட்டின் சிறந்த
 வீரரான தியான்சந்திரன் பிறந்த தினமான 
ஆகஸ்டு 29ஆம் நாள் 
"தேசிய விளையாட்டு 
தினமாகக் கொண்டாடப் படுகிறது.

தேசிய விருதுகள்!
****************************
பாரத ரத்னா! இந்தியாவின்
 மிகச் சிறந்த விருது இதுதான்! 
இன்னொரு சுவாரசியமான செய்தி
! இந்தியாவைப் போல் பாகிஸ்தானின் 
மிக உயர்ந்த விருது "நிஷான் இ பாகிஸ்தான்' 
ஆகும். இந்த இரு விருதுகளையும் பெற்ற 
ஒரே நபர் மொரார்ஜி தேசாய்!
பாரத ரத்னாவிற்கு அடுத்த 
நிலையிலுள்ள உயர்ந்த சிவிலியன் 
விருதுகள் முறையே 
பத்ம விபூஷண்! பத்ம பூஷண்! பத்மஸ்ரீ! 
ஆகியவை!

தேசிய தினங்கள்!
*************************
குடியரசு தினம்..........ஜனவரி 26
சுதந்திர தினம்............ஆகஸ்டு 15
காந்தி ஜெயந்தி...........அக்டோபர் 2

தேசிய நீர் வாழ் உயிரி!
***********************************
டால்பின்! இந்தியாவில் கங்கை நதியிலும், 
பிரம்மபுத்திரா நதியிலும் 
மற்றும் கடல் பகுதிகளிலும் 
காணப்படும் கடல் வாழ் உயிரினம்! 
அழகும் நட்பும் நிறைந்தது!
 1972 வன உயிரியல் பாதுகாப்புச் 
சட்டத்தின் கீழ் இவ்வுயிரினம்
 உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது.

தேசிய நதி!
*****************
2008ஆம் ஆண்டு இந்தியாவின்
 தேசிய நதியாக "கங்கை' அறிவிக்கப்பட்டது!
 இந்தியாவின் நீளமான நதி, 
புனிதமான நதி, மிக அதிக தண்ணீர் பரப்பு
 கொண்ட நதி. அதிக எண்ணிக்கையிலான 
துணை நதிகள் கொண்ட நதி என்று 
பல சிறப்புகள் உடையது இது!

தேசியப் பாரம்பரிய விலங்கு!
******************************************
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும்
 மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே 
இந்தியாவின் தேசியப் பாரம்பரிய
 விலங்காகக் கருதப்படுகிறது. 
ஆசிய யானைகளில் 60 சதவிகிதமும்
 இந்தியாவிலேயே உள்ளன.

இன்னும் இந்தியாவின் 
எண்ணில் அடங்காது! எத்தனை மொழி! 
எத்துணைக் கலாசாரம்! இந்நாட்டின்
 கலாசாரத்தையும், மாண்பையும், 
காப்போம்! கல்வி, விளையாட்டு
 போன்ற அத்தனை துறைகளிலும் 
மேன்மேலும் சாதிப்போம்! 
நம் தாய்க்குப் பெருமை சேர்ப்போம்! 
ஒற்றுமையுடன், அன்புடன், 
உறவாடுவோம்! ஜெய்ஹிந்த்!

நன்றி : தினமணி நாளிதழ் - 12.08.2016
*************

Saturday, August 5, 2017

புகழ்பெற்ற கல்லறை* *வாசகங்கள்*


            *புகழ்பெற்ற  கல்லறை*     
                       *வாசகங்கள்*
            
💮 *புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை.

"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.  

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை❓

Friday, August 4, 2017

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது 
என்ற சுவாரசியமான தகவல்களைக் காண்போம்.....

ஒப்பணக்கார வீதி :

விஜயநகரப் பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புரம்:

1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:

பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புரம், கெம்பட்டி காலனி, தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:

கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் :

விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு :

டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1782ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.  கோட்டை ஈஸ்வரர் இருக்கிறார்.

ராஜா வீதி :

ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் :

அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.


Thursday, August 3, 2017

நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???

நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி???

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு
குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு
சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில்
வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித
ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து
தொகுக்கப் பட்டுள்ள இந்த
விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும்
நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி
கற்களின் தரம் அறியலாம்.

Wednesday, August 2, 2017

இந்தியாவின் தேசியக்கொடி வரலாறு

ஜூலை 22: இந்தியாவின் தேசியக்கொடி
ஏற்கப்பட்ட தினம் இன்று (1947). சிறப்பு பகிர்வு

இந்தியாவின் தேசியக்கொடிக்கு பின்னர் ஒரு சுவையான வரலாறு உண்டு. வெள்ளையரின் யூனியன் ஜாக் கொடி,நட்சத்திரம் அதன் மீது ஒரு கிரீடம் இவை தான் இந்தியாவில் கொடியாக ராணுவத்தில் இருந்தது. ஸ்டுட்கார்ட் எனும் இடத்தில் நடந்த இரண்டாவது சோசியலிஸ்ட் மாநாட்டில் மேடம் பிகாஜி ருத்ஸ்ம்ஜி காமா எட்டு தாமரைகளை மேலே கொண்டு,நடுவில் வந்தே மாதரம் கோஷத்தை கொண்டு,கீழே பிறை மற்றும் சூரியன் இருக்குமாறு இந்தியாவின் கொடியை வடிவமைத்தார். அது பிரபலம் ஆகவில்லை.

கோவையில் ஒரு கொடியை பயன்படுத்தகூடாது என்று தடை எழுந்தது. அது திலகர்,அன்னி பெசன்ட் அம்மையார் இருவரும் சேர்ந்து உருவாக்கிய யூனியன் ஜாக் முத்திரை,பிறை,ஏழு நட்சத்திரங்கள்,சிவப்பு,பச்சை பட்டைகள் என்றிருந்த கொடி. பிங்காலி வெங்கையா முப்பது வெவ்வேறு மாதிரிகளை தேசிய கொடியாக கொள்ளலாம் என்று திட்டங்களை தந்தார். இதற்கான பொருளுதவியை செய்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். காந்தி வெங்கையாவை ஒரு கொடியை விடுதலைக்கு இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன் வடிவமைக்க சொன்னார்.

அவர் ஒரு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டு சிவப்பு,பச்சை,கை ராட்டை ஆகியன கொண்டு ஒரு கொடியை வடிவமைத்தார் சிவப்பு ஹிந்துக்களையும்,பச்சை இஸ்லாமியர்களையும் குறிப்பதாக காந்தி சொன்னார். பின்னர் வெள்ளை நிறத்தை பிற மதங்களை குறிக்க சேர்த்துக்கொண்டார். அதற்கு பின்னர் அந்த விளக்கத்தை மாற்றி தியாகம்,தூய்மை,நம்பிக்கை ஆகியவற்றை நிறங்கள் குறிப்பதாக மாற்றி சொன்னார்.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததும் தேசிய கொடியை வடிவமைக்கும் பொறுப்பு ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், முன்ஷி, ராஜாஜி, சரோஜினி நாயுடு முதலியோரை கொண்டிருந்த குழு வசம் போனது. காந்தியின் கை ராட்டையை காங்கிரசின் கொடியாக மக்கள் கண்டிருந்தார்கள். அதை அப்படியே ஏற்க அம்பேத்கர் ஆட்சேபம் தெரிவித்தார். அசோக சிம்மத்தூணில் இருந்து சக்கரம் சேர்க்கபட்டது. அது தர்மத்தை வலியுறுத்துவதாக சொல்லப்பட்டது. இதே தினத்தில் அந்த கொடி தேசிய கொடியாக ஏற்கப்பட்டது.

Monday, July 31, 2017

தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!

தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!


🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்!
படித்ததை பகிர்கிறேன்! ☜❤✓