Sunday, November 15, 2015

வெள்ளக்கோயில்-- வீரகுமார சுவாமி கோயில்

வெள்ளக்கோயில் வீரகுமார சுவாமி கோயில்

 600 ஆண்டு பழமையான இக்கோயில் ஆரம்பத்தில் புற்று வடிவமாக இருந்தது. அதன்பிறகு கோயிலாக கட்டப்பட்டது. புற்றில் இருந்து தோன்றியவர் வீரக்குமாரன் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். வீரகுமார சுவாமி கோயில் வளாகத்தில் பிரமாண்ட குதிரை சிலைகள் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் பக்தர்கள் நேர்ந்து வழங்கியவை. இக்கோயிலில் நடத்தப்படும் வெடி வழிபாடும், அதில் பெண்கள் பங்கேற்றால் விபரீதம் நிகழும் என ஊர்வாசிகள் கூறுவதும் ஆச்சரியமளிக்கிறது.

கோயிலில் கிழக்குப்புறத்தில் மகாமுனி சன்னதி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக எசவட புரவிகள் எனும் 11 பெரிய குதிரை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5வது குதிரை சிலை, ஆங்கிலேயே துரை ஒருவர் பிடித்து கொண்டு நிற்பது போல உள்ளது. இது ஆங்கிலேய துரை ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சிலை என ஊர்வாசிகள் சொல்கிறார்கள். வீரகுமார சுவாமி கோயிலில் பொட்லி எனப்படும் வெடியை வெடித்து பூஜை நடத்தப்படுகிறதுவெடிச் சத்தம் வீரகுமார சுவாமிக்கு மிகவும் பிடிக்கும் என்று மக்கள் நம்புவதால், காலம்காலமாக வெடியை வெடித்தே மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். 

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளைக்கார துரை ஒருவர், குதிரையில் இப்பகுதி வழியாக வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்து வீரகுமார சுவாமி கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. துரையின் குதிரை மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. இதனால் கோபமடைந்த அவர், கோயிலில் வெடி வெடிக்க தடை விதித்தார். ஆனால் அடுத்த நொடியே துரையின் கண்பார்வை போய்விட்டதாம். கடவுள் நிந்தித்ததால் வந்த வினை என்பதை உணர்ந்த துரை, குதிரை செய்து வைப்பதாக வேண்டிக் கொண்ட பிறகு பார்வைதிரும்பியதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

 துரை வழங்கிய குதிரைதான், அதற்கு சாட்சி என்று கூறி திகைக்க வைக்கிறார்கள். வீரகுமாரன் கோயிலில் வழிபாடு நடக்கும் போது ஆண்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும். பெண்கள் வெளியில் இருந்துதான் கும்பிட வேண்டும். மீறி கலந்து கொண்டால் அவர்களுக்கு விபரீதம் நேர்ந்து விடும் என்பதும் இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் மகாமுனியம்மன் சன்னதியிலேயே பெண்களை நிறுத்திவிடுகிறார்கள். இந்த கட்டுப்பாட்டை மீறி கோயில் திருவிழாவில் பங்கேற்ற கோவை பெண் ஒருவர், கை கால் விளங்காமல் பட்ட துயரங்களை என்றுமே தங்களால் மறக்க முடியாது என்கிறார்கள் பக்தர்கள். வீரகுமார சுவாமியிடம் மன்னிப்பு கேட்டு விரதம் இருந்த பிறகுதான் அந்த பெண்ணுக்கு நோய் குணமானதாம்.

No comments:

Post a Comment