நமது தேசியச் சின்னம்!
**********************************
குழந்தைகளே! நமது தேசியச் சின்னம் என்ன தெரியுமா? சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரமாகும். அதில் இருப்பவை நான்கு சிங்கங்கள்! ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு சக்கரமும் (தர்ம சக்கரம்-WHEEL OF LAW) இடையே சீறிப்பாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட "வாய்மையே வெல்லும்' என்னும் பொருள் கொண்ட "சத்ய மேவ ஜயதே' என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இது இந்தியாவின் தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது!
இந்த தேசியச் சின்னத்தை நமது இந்திய அரசாங்க அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்!
இந்திய குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள், மாநில ஆளுநர்கள், அரசின் தலைமை அதிகாரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் தேசிய இலாகாக்களின் ஒரே அதிகார பூர்வ முத்திரை இதுவே!
தேசியச் சின்னம், அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களிலும், சில மிக முக்கிய அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டு அரசுடனான தொடர்புக்கான எழுது தாள்களிலும் நீல வண்ணத்தில் அச்சிடப்பட வேண்டும். அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் எழுது தாள்களில் சிகப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தேசியக் கொடி!
***********************
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் வரையறுக்கப்பட்ட நீள, அகலங்களும் கொண்ட மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே ஓர் அசோகச் சக்கரமும் (கடல் நீல வண்ணம் கொண்டது) அதை சுமந்து 24ஆரக் கால்களும் உள்ளன.
தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கையையும், வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த "பிங்களி வெங்கைய்யா' என்பவரே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் என்று பெயர் சூட்டப்பட்ட தில்லி வைஸ்ராய் ஹவுஸில் 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.
எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் சடங்கு 1948முதல் துவங்கியது.
இந்திய தேசியக் கொடி முதன்முதலாக விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 என்னும் செயற்கைக் கோள் இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.
தேசிய கீதம்!
*******************
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது! (தாகூரின் இந்த முழுப் பாடல் மொத்தம் ஐந்து செய்யுள் கொண்டது. எனினும் முதல் செய்யுள் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.)
இந்தியாவின் பூபாளப் பாடல் என்னும் இப்பாடலின் சாராம்சம் வருமாறு...
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்!
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், சிந்துவையும், குஜராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது!
நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை, ஆறுகளின் இன்னொலியில் ஒன்று படுகின்றன. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன. நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
இந்தப் பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24இல் "ஜன கண மன....பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது.
தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழி பெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1911, டிசம்பர் 27ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மகா நாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. (மகா நாட்டின் இரண்டாம் தினம்) முதல் நாளில் "வந்தே மாதரம்' பாடலே பாடப்பட்டது.
1912இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் "பாரத விதாதா' என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
1919இல் "பஏஉ ஙஞதசஐசஎ நஞசஎ ஞஊ ஐசஈஐஅ' எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
வந்தே மாதரம்!
************************
"ஜன கண மன' தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டபோதே சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு உத்வேகமூட்டிய வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு வழங்கப்படும் உயர்ந்த இடத்தை வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பாடல்.......
வந்தே மாதரம்!
************************
சஸ்ய சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!.
.....
இப்பாடலை அரவிந்தர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்!
அதன் தமிழ்ப்பொருள்..
..
""அம்மா வணங்குகின்றேன். இனிய நீர்ப்பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற்(மலைகளின் குளிர்ச்சி)சிறப்பினை, பைந்நிறப்(சியாமள நிறம்)படினம் பரவிய வடிவினை, வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மணம் பல செறிந்தனை. குறுநகையுடன் குலவிய மாண்பினை. நல்குவை இன்பம்! வரம் பல நல்குவை! அம்மா வணங்குகிறேன்!
1882இல் வெளியான பங்கிம் சந்திரரின் ஆனந்த மட் எனும் நாவலில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் செய்யுள் இது.
சமஸ்கிருத மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது.
1896இல் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய மொழி!
**********************
அரசியல் சட்டத்தின் பிரிவு 343(1) இன் படி தேவநாகரி லிபியிலான இந்தியே நாட்டின் அதிகாரபூர்வமான மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது.
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் முதன்முதலாக 14 மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன.
தற்போது இதில் மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. அவை.....,
1.இந்தி, 2.தமிழ், 3.மலையாளம், 4.வங்காளி, 5.அசாமி, 6.தெலுங்கு, 7.மராத்தி, 8.ஒரியா, 9.பஞ்சாபி, 10.சமஸ்கிருதம், 11.சிந்தி, 12.குஜராத்தி, 13.காஷ்மீரி, 14.உருது, 15.கன்னடம், 16.கொங்கணி, 17.மணிப்பூரி, 18.நேப்பாளி, 19.தோஹ்ரி, 20.போட்டோ, 21.சந்தாலி, 22.மைதிலி போன்றவை.
தேசியக் காலண்டர்!
*******************************
சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட "சக' வருடக் காலண்டரே (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) மறு சீரமைப்புக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக் காலண்டர்.
சக வருடக் காலண்டர் கி.பி. 78இல் மன்னர் கனிஷ்கரால் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சக ஆண்டு 365 நாட்கள் கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ர முதல் தேதி மார்ச் 22ஆகும். லீப் வருடத்தில் சைத்ர முதல் தேதி 21ஆம் தேதியாகும்.
தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879இல் சைத்ர முதல் நாளில் (கி.பி.1957 மார்ச் 22) தொடங்கியது.
சக வருட மாதங்கள் சைத்ரம், வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, ச்ராவண, பாத்ர, ஆஸ்வின, கார்த்திக, அக்ரஹாயன, பெüஷ, மாகம், பால்குன.
இதனுடன் நாம் இன்று வெகுவாகப் பயன்படுத்தும் ஆங்கிலக் கிரிகோரிய காலண்டரும் புழக்கத்தில் உள்ளது.
கிரிகோரியன் காலண்டர் வருடத்திலிருந்து 78ஐக் கழித்தால் அப்போதைய சகவருடம் கிடைக்கும். (சான்றாக....2016-78=1938--சக வருடம்)
தேசிய விலங்கு!
************************
புலி! ஆம்! இதுவே தேசிய விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது! ஆசியப் பகுதியின் சிறப்பு மிக்க விலங்கு இது!
புலி இனம் அழிந்து போகாமல் இருக்க
இந்தியாவில் புலி பாதுகாப்புத் திட்டம் 1973இல் துவங்கப்பட்டது.
தேசியப் பறவை!
************************
மயில்! 1963இல் இந்தியாவின் தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தேசிய மரம்!
*******************
""அட! அற்புதம்!'' என்று நினைக்கும்படியான மரம்! ஆம் ஆலமரம்! எவ்வளவு சரியான தேர்வு! பல்வேறு மாநிலத்தவரும், பல்வேறு மொழியினரும் விழுதுகளாய் பாரதத் தாயால் உருவாக்கப்பட்டோம்! இன்று அத்தாயை இவ்விழுதுகள் போல் வேரூன்றிக் காப்போம்! என்று கட்டியம் கூறுவது போல் அல்லவா இது அமைந்துள்ளது!
தேசியக் கனி!
*********************
"பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் "மாம்பழம்' தான் நமது தேசியக் கனி!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாங்கனிச் சாகுபடி நடந்ததாம்! (அன்னை, தந்தையே உலகம் என்று எல்லோருக்கும் விநாயகர் மூலமாக ஞானம் வழங்கிய கனி அல்லவா?)
தேசிய விளையாட்டு!
*********************************
ஹாக்கி! இதுவரை இந்தியா இந்த விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது! இந்த விளையாட்டின் சிறந்த வீரரான தியான்சந்திரன் பிறந்த தினமான ஆகஸ்டு 29ஆம் நாள் "தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப் படுகிறது.
தேசிய விருதுகள்!
****************************
பாரத ரத்னா! இந்தியாவின் மிகச் சிறந்த விருது இதுதான்! இன்னொரு சுவாரசியமான செய்தி! இந்தியாவைப் போல் பாகிஸ்தானின் மிக உயர்ந்த விருது "நிஷான் இ பாகிஸ்தான்' ஆகும். இந்த இரு விருதுகளையும் பெற்ற ஒரே நபர் மொரார்ஜி தேசாய்!
பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையிலுள்ள உயர்ந்த சிவிலியன் விருதுகள் முறையே பத்ம விபூஷண்! பத்ம பூஷண்! பத்மஸ்ரீ! ஆகியவை!
தேசிய தினங்கள்!
*************************
குடியரசு தினம்..........ஜனவரி 26
சுதந்திர தினம்............ஆகஸ்டு 15
காந்தி ஜெயந்தி...........அக்டோபர் 2
தேசிய நீர் வாழ் உயிரி!
***********************************
டால்பின்! இந்தியாவில் கங்கை நதியிலும், பிரம்மபுத்திரா நதியிலும் மற்றும் கடல் பகுதிகளிலும் காணப்படும் கடல் வாழ் உயிரினம்! அழகும் நட்பும் நிறைந்தது! 1972 வன உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவ்வுயிரினம் உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது.
தேசிய நதி!
*****************
2008ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக "கங்கை' அறிவிக்கப்பட்டது! இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக தண்ணீர் பரப்பு கொண்ட நதி. அதிக எண்ணிக்கையிலான துணை நதிகள் கொண்ட நதி என்று பல சிறப்புகள் உடையது இது!
தேசியப் பாரம்பரிய விலங்கு!
******************************************
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காகக் கருதப்படுகிறது. ஆசிய யானைகளில் 60 சதவிகிதமும் இந்தியாவிலேயே உள்ளன.
இன்னும் இந்தியாவின் சிறப்புகள் எண்ணில் அடங்காது! எத்தனை மொழி! எத்துணைக் கலாசாரம்! இந்நாட்டின் கலாசாரத்தையும், மாண்பையும், காப்போம்! கல்வி, விளையாட்டு போன்ற அத்தனை துறைகளிலும் மேன்மேலும் சாதிப்போம்! நம் தாய்க்குப் பெருமை சேர்ப்போம்! ஒற்றுமையுடன், அன்புடன், உறவாடுவோம்! ஜெய்ஹிந்த்!
நன்றி : தினமணி நாளிதழ் - 12.08.2016
No comments:
Post a Comment